மனிதனின் இம்மை மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பொறுமைதான். அன்றாடம் நம்வாழ்வில் நிகழ்த்தும் காரியங்கலானாலும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினையானாலும், நம்மை படைத்த இறைவனை வணங்கும் விசயமானாலும் அனைத்திலும் பொறுமை இருந்தால்தான் வெற்றிபெறமுடியும். அவசரப்பட்டு செய்யும் எந்த காரியமானாலும் அதில் முழுமையிருக்காது. ஏதேனும் ஒரு செயலை நாம் செய்து அதனால் நாம் பாதிப்பை உணரும்போது, 'ஒருநிமிஷம் நான் பொறுமையா இருந்திருக்கக்கூடாதா?' என்று புலம்புவதையும் நம் வாழ்வில் சந்தித்தே வருகிறோம். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்;
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.2:153 .
தொழுகையில் பொறுமை;
.......................................................
இன்று அவசரயுகத்தில் அல்லாஹ்வை வணங்குவதும் ஜெட் வேகத்தில்தான். குறிப்பாக ரமலான் மாதத்தில் இரவுத்தொழுகையில் இருபது ரக்'அத் தொழுகிறோம் என்ற பெயரில், பொறுமையின்றி மின்னல்வேக தொழுகை தொழுவதை பார்க்கிறோம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.நூல்;புஹாரி,எண் 994 ,
ஸஜ்தாவிற்கு மட்டும் ஐம்பத்து வசனங்கள் ஓதும் நேரம் சுமார் பத்து நிமிடங்கள் என்றால், இன்று இருபது ரக்'அத்துகளை இருபத்து நிமிடத்தில் தொழுபவர்கள் சிந்திக்கவேண்டும்.
பிரார்த்தனையில் பொறுமை;
.............................................................
நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்போது, அந்த தேவையை அல்லாஹ் தாமதமாக நிறைவேற்ற நாடினால், நம்மில்சிலர் அல்லாஹ்வின் மீது நிராசையடைவதை பார்க்கிறோம். நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
'நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
நூல்;புஹாரி,எண் 6340
போரில் தேவை பொறுமை;
...........................................................
அல்லாஹ் கூறுகின்றான்;
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்). 8:65.
நோயின் போது தேவை பொறுமை;
.............................................................................
நமக்கு நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்வதோடு, நோயை நீக்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். ஆனால் இன்று மருத்துவம் பார்க்கிறோம் அதில் தீரவில்லையானால் மந்திரவாதிகளை நாடி ஓடுகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கும் நோயின் மூலம் நன்மையையும் சுவனத்தையும் அளிக்கிறான்.
அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்;புஹாரி,எண் 5652
துன்பத்திலும் தேவை பொறுமை;
.........................................................................
கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள்.நூல்; புஹாரி,எண் 6943
பிரியமானவரை இழக்கும் நிலையிலும் பொறுமை;
...........................................................................................................
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.நூல்;புஹாரி,எண் 6424
வறுமையிலும் பொறுமை;
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை' என்று கூறினார்கள். நூல்;புஹாரி, எண் 6470
பொறுமை பற்றி ஏராளமான செய்திகள் உண்டு. படிப்பவர்களின் 'பொறுமையை' சோதிக்கக்கூடாது எனபதற்காக சுருக்கமாக தந்துள்ளோம். அல்லாஹ் நம்மை பொருமையாளர்களாக வாழ்ந்து மரணிக்கச்செய்து, பொறுமையாலர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தில் சேர்த்தருள்வானாக! நன்றி: முகவை அப்பாஸ்
Blogger templates
Followers
About
Viewers
Tuesday, September 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)